இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!பிச்சையிடுவது தவறு. இது சோம்பேறிகளை உருவாக்கும் என்று சொல்வது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
ஆதரவற்ற இந்தத் தாய்க்கு இவரது பிள்ளைகளால்கூடக் கைவிடப்பட்ட நிலையில், நம்மைப் போன்றவர்கள் உதவாவிட்டால் பிறகு யார் உதவப் போகிறார்கள் என்று பார்ப்பது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
ஊழியர் தவறு செய்கிறார். தவறு செய்பவர்களுக்கு வளைகுடா நாடுகளின் பாணியில் சவுக்கடிதான் சிறந்த வழி என்பது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
தவறுவது மனித இயற்கை; மன்னிப்பதே பேராண்மை அப்போதுதான் அவன் திருந்துவான் என்று வாய்ப்பு வழங்குவது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
தவறுகள் அதிகரித்துவரும் (குற்றம் வேறு தவறு வேறு) இவ்வேளையில் இதயக் கண்கொண்டு பார்ப்பதெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது, அவரவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்யப்படவேண்டிய விஷயம்.
ஏமாற்றுபவனுக்கு அடி உதை என்பது சில பண்ணையார்களின் பழக்கம். ஒரு சில செளகரியங்களைக் குறைப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால் உடல் தழும்பு மறைந்தும் மனத் தழும்புகள் மறையாதவர் எத்துணையோ பேர் அவர்கள். இவர்களைப் பழிவாங்காமல் இருப்பவர்கள் என்பது என்ன நிச்சயம்?
மகன்-மகள்களின் தவறுகளை, ஒரு தந்தை அறிவுக்கண் கொண்டுதான் பெரும்பாலும் பார்க்கிறார். தாயோ இதயக் கண்கொண்டு பார்க்கிறார். உங்களைக் கேட்கிறேன். தந்தை திருத்திய பிள்ளைகள் அதிகமா, தாய் திருத்திய பிள்ளைகள் அதிகமா?
சட்டம் அறிவின் வழியே சிந்திக்க மட்டுமே தெரிந்தது. அதற்கெனவே உருவாக்கப்பட்டது. இதுவும் தேவைதான். இதற்கு முன் இதயத்தின் கண்கொண்டு ஒருமுறை பார்ப்பதும் நல்லது.
No comments:
Post a Comment